அந்திமழை சார்பாக தமாகாவின் மூத்த துணைத்தலைவர் பீட்டர் அல்போன்சை சந்தித்தபோது உற்சாகமாக இருந்தார். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான பீட்டர், இன்றைய அரசியல் பற்றி விரிவாகப் பேசினார். சமூக வலைத்தளம் பற்றியுமான பிரமிப்பும் எச்சரிக்கையும் அவரிடம் இருப்பதைக் காணமுடிந்தது. இன்றைய புதிய தலைமுறைக்கும் ஏற்ப அரசியலை நகர்த்திக்கொண்டிருக்கும் அவருடனான நேர்காணலில் இருந்து சில பகுதிகள்...
அரசியலின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் சமீபத்தில் ஓரிடத்தில் பேசியிருந்தீர்கள். என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது?
தமிழ் நாட்டில் காங்கிரஸ் 1967-ல் தோற்றபின்னர் அக்கட்சியில் இணைந்தவர்களில் ஒருவன் நான். பெருந்தலைவர் காமராஜர் என்கிற மிகப்பெரிய ஆகிருதியால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் இணைந்தவன். நான் போட்டியிட்ட முதல் தேர்தல் 1989-ல். திமுக, அதிமுகவை எதிர்த்து நாங்கள் காங்கிரசில் தனியாக நின்றோம். அந்த தேர்தலில் எனக்கு மொத்த செலவே 80ஆயிரம்தான். பல ஊர்களில் செலவுக்குப் பணம் வேண்டாம், நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டார்கள். ஒவ்வொரு பூத்துக்கும் 100 ரூபாய் கொடுத்தோம். தேர்தலுக்குப் பின்னால், நான் வெற்றிபெற்ற பிறகு, பூத் செலவுக்காகக் கொடுத்த பணத்திலும் செலவானதுபோக மீதி இவ்வளவு என்று சுமார் 40 விழுக்காடு பூத்களில் கணக்குப் போட்டு 17 ரூ, 18 ரூ மிச்சம் என்று திருப்பிக்கொடுத்துவிட்டார்கள். நான் பார்த்த அரசியல்வாதிகளும் அப்படி. அம்பாசமுத்திரத்தில் கோமதி சங்கர தீட்சிதர் என்றொரு எம் எம் ஏ இருந்தார். அவருக்குப் பின்னால் கருமுத்துத்தேவர் இருந்தார். கடையநல்லூரில் எஸ்.எம்.ஏ. மஜீத் இருந்தார். இவர்கள் பொதுவாழ்வுக்காக பெரும் பணத்தை இழந்தவர்கள். தீட்சிதர் கடுமையான வறுமையில் இருந்தார். அவரை ஒருவர் தன் மகனுக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் வேண்டி ஒரு சிபாரிசுக்காக அணுகினார். அவரிடம் ரயில் ஏறி சென்னைக்குச் செல்ல காசு கிடையாது. அவருக்கு 200 ரூபாய் கொடுத்தார்கள். தீட்சிதர் ரயிலேறி சென்னை வந்து, அந்த பையனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்தார். பின்னர் ஊருக்குத்திரும்பி வந்து, அந்த ஆளைக் கூப்பிட்டு, இந்தாப்பா.. செலவானதுபோக மீதிப்பணம் என்று 85 ரூபாயைத் திருப்பித் தந்தார். மஜீத் சாயபு, தன் வீட்டில் அறுவடை செய்யப்பட்டு வந்த நெல்லை விற்று, தன்னைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளராக நின்ற ஒருவருக்குச் செலவு செய்ய அளித்தார். ஏ.ஆர்.சுப்பையா முதலியார் எம் எல் ஏவாக இருந்தபோது, இரண்டாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். ஒரு நாளும் தனக்கென்று எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. இவர்களைப் பார்க்கையில் ஒரு மரியாதை இருந்தது. ஒருவேளை இப்படிப்பட்ட மனிதர்கள் எம்.எல்.ஏக்களாக இருந்ததால் மிக அருமையான தொண்டர்கள் இருந்தார்களா, அல்லது நல்ல தொண்டர்கள் இருந்ததால் இதுபோன்ற அருமையான மனிதர்கள் எம்.எல்.ஏக்கள் ஆனார்களா என்று எனக்குத் தோன்றுவது உண்டு. இதனால் அன்றைக்குத் தேர்தல் என்பது மிகவும் குறைவாக செலவு பிடிப்பதாக இருந்தது. தேர்தலை எப்போதும் எதிர்கொள்ள துணிச்சல் இருந்தது. ஆனால் இன்று தேர்தல் மிகவும் பணம் செலவழிக்கக் கூடியதாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி?
பல்வேறு பிரச்னைகளால் இன்றைய சமூகம் முரண்பட்டதாக மாறிவிட்டது. ஒரு சமூகத் தொகுப்புக்கு நல்லதாக இருப்பது இன்னொரு சமூகத் தொகுப்புக்கு எதிராக உள்ளது. எனவேதான் பல்வேறு கட்சிகள் தோன்றி உள்ளன. 1967க்குப் பின்னால் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் கூட்டணியில் பங்குபெற்ற கட்சிகளுக்கு வெற்றியில் பங்கு கிடைத்ததே தவிர ஆட்சியில் இடம் பெறமுடியவில்லை. இன்று இருக்கிற பாராளுமன்ற ஜனநாயக முறைகளில் விகிதாச்சார முறை இல்லாத காரணத்தால் 30 சதவீதம் வாக்குகள் பெற்றவர்கள்கூட பெரும்பான்மை பெற்றுவிடுகிறார்கள். மீது 70 சதவீத வாக்குகள் பெற்றவர்களுக்கு சட்டசபையில் குரல் ஒலிக்கக்கூட இப்போது வாய்ப்பு இல்லை. கூட்டணி ஆட்சி அமைந்தால் ஜனநாயக அதிகாரத்தில் அனைவரும் பங்கேற்கும் வாய்ப்பு இருக்கும். இன்று அமைச்சரவையின் செயல்பாடே இல்லை. அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. நேரு காலத்தில் அமைச்சரவையில் இருந்தவர்கள், முன்பு தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் போன்றவர்களின் தரத்துடன் இன்று இருப்பவர்களின் தரத்தை ஒப்பிட முடியாது. ஏனெனில் இன்று உட்கட்சி ஒழுங்கு, கட்டுப்பாடு என்ற பெயரில் யாரும் எதையும் கேள்வி கேட்கமுடியாத நிலை நிலவுகிறது. கட்சித்தாவல் தடைச் சட்டம் வந்தபின்னர், முரண்படக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை முடக்கிவிடுகிறார்கள். ஆனால் கூட்டணி ஆட்சி அமைந்தால் அமைச்சரவை செயல்பாடு ஜனநாயகம் பெறும் நிலை அமையும். பெரும் ஊழல்களை மூடி மறைக்க முடியாது. கூட்டணி ஆட்சி என்பது இன்றைக்கு காலத்தின் கட்டாயமென்று நான் நினைக்கிறேன்.
ஆனால் 2006-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காமல் போனதற்கு நீங்களும் அப்போதைய சட்டமன்ற காங் தலைவர் சுதர்சனமும்தான் காரணம் என்று காங். தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டி உள்ளாரே?
2006-ல் அமைந்த திமுக ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்காதது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு அது. திமுகவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துத்தான் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தது. அன்றைக்கு காங். தலைவராக இருந்தவர் கிருஷ்ணசாமி. அவர் தமிழகப் பொறுப்பாளராக இருந்த வீரப்ப மொய்லியிடம் எல்லா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும், ஆட்சியில் பங்கு இல்லாவிட்டால் ஆதரவு அளிப்பதாக கையெழுத்துப் போடக்கூடாது. அப்படி கையெழுத்துப் போட்டால் தொண்டர்கள் என்னைக் கல்லால் அடிப்பார்கள் என்று சொன்னார். இவ்வளவு முக்கியமான முடிவை நானும் சுதர்சனமும் எடுத்துவிட முடியும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? கூட்டணி பேச்சுவார்த்தையையே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேசமுடியாது. அதைப் பேசுவதற்கு டெல்லியிலிருந்து யாரவது வருவார்கள். அப்படிப் பேசுகையில் தமிழ்நாடு தலைவரை உள்ளே கூட அழைத்துச் செல்லமாட்டார்கள். அறைக்கு வெளியே உட்கார வைத்துவிட்டுத்தான் செல்வார்கள். இளங்கோவனுக்கே அது நேர்ந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நண்பர் ஞானதேசிகன் இப்படிச் செய்தால் நான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று மறுத்திருக்கிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கே இந்த நிலை என்றால் ஆட்சியில் பங்கு போன்ற முடிவை தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதாரண சட்டமன்ற உறுப்பினரான என்னால் தடுத்துவிடமுடியுமா? இளங்கோவன் சொல்வதுபோல் காங்கிரஸ் தலைமை பலவீனமானது அல்ல. கலைஞர் பங்கு கொடுக்கவில்லை என்று அப்போதே யாரோ பேசி பிரச்னை ஆகி பத்திரிகைகளில் வந்தது. காலையில் அதைப் படித்துவிட்டு சட்டமன்றம் வந்த அவர் என்னையும் சுதர்சனத்தையும் கூப்பிட்டார். என்ன இது? உங்க ஆளுங்க இப்படிப் பேசறாங்க?.. நானா உங்களுக்கு பிரமாணம் செய்துவைக்க முடியும்? உங்களில் யார் மந்திரி என்று உங்கள் தலைமை தானே முடிவு செய்யமுடியும்? எங்களில் யாருக்கு மந்திரி பதவி வேண்டும் என்று நான் டெல்லியில்போய் கேட்டதுபோல் அவர்கள் சொல்லவேண்டும் அல்லவா? அவங்க சொன்னால்தானே நான் பதவிப் பிரமாணம் செய்துவைக்கமுடியும்? என்றார். பக்கத்தில் இருந்த ஆற்காட்டார், ஏம்பா ஏழு ரூம் காலியா இருக்குப்பா, நீங்க போய் லிஸ்ட்ட வாங்கிட்டுவாங்க என்றார்.
அன்றைக்கு இளங்கோவன் கலைஞருடன் பேசக் கூடிய உறவில் இல்லை. இப்போது கலைஞரிடம் அடிக்கடிப் பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். எனவே கலைஞரிடம் சென்று இது உண்மையா என அவர் கேட்கவேண்டும் என நான் கோருகிறேன். அன்று காங்கிரஸ் தலைமை உங்களிடம் பங்கு கேட்டதா? நீங்கள் ஒப்புகொள்ளவில்லையா? என்று கேட்கவேண்டியதுதானே? ஏன் எங்களைக் குற்றம் சொல்கிறார்?
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது தமிழ்நாட்டில் அவரது கட்சியினர் செய்த ஆன்மீக வழிபாட்டுக் காரியங்களைக் கவனித்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்?
அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதன் முன்னணித்தலைவர்கள் நடத்தும் அரசியம் மிகவும் வினோதமான அரசியல். 45 ஆண்டுகால அரசியல் மாணாக்கானாகிய எனக்கே அந்த செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பால்குடம் எடுத் தால் பத்தாயிரம் பேர், மொட்டை போட்டால் பத்தாயிரம் பேர், மண்சோறு சாப்பிட்டால் ஐயாயிரம் பேர், தீச்சட்டி எடுத்தால் பதினையாயிரம் பேர் எடுக்கறாங்க. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. வேறு கட்சிகளுக்கும் இது சாத்தியமில்லை. இதனால் என்ன நடந்திருக்கிறது என்றால் நிஜமான பிரச்னைகள் மீதான கவனம் திசை திருப்பப்பட்டு, சாதாரண மக்கள் இதில் ஈடுபடுகிறார்கள். அடித்தட்டு மக்கள் பலர் அதிமுகவுடன் தொடர்பில் உள்ளார்கள். மகளிர் சுய உதவிக்குழுகள், ரேஷன் கடைகள், டாஸ்மாக் கடைகள் பின்னால் நடக்கும் பார், மணல் அள்ளுபவர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டுக்கலவையாக இது வளர்ந்திருக்கிறது. எல்லாருமே அரசியலில் இயங்குகிறார்கள். அதிமுகவில் அதிகாரப்படிநிலைகள் இல்லை. நம்பர் ஒண்ணுக்குப் பின்னால் நம்பர் இரண்டு, மூன்று என யாரும் இல்லை. எல்லோரும் தங்களுக்கு நம்பர் இரண்டு என்ற இடம் வரும் என நினைக்கிறார்கள். அதற்குத் தகுதியாக இருக்கவேண்டுமானால் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும். அதனால்தான் அந்த கட்சியில் இயக்கம் இருக்கிறது. இதுவரை நான் கேள்விப்பட்டிராத அதிசயம். இது தமிழ்நாட்டுக்குப் பலன் தருமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
நான்கைந்து முறை உங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. மீண்டும் தமாகா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகக் கூட இளங்கோவன் நியமிக்கப்படுவதற்கு சற்று முன்னால் வரை உங்களுக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கொடுப்பப்படவில்லை. நீங்கள் தமாகாவில் அணி சேர இந்தப் புறக்கணிப்பு ஒரு காரணமா?
கடந்த பதினைந்து ஆண்டுகளில் எப்போதெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைமையில் மாறுதல் வந்ததோ அப்போதெல்லாம் தலைவர் பதவிக்கு என் பெயரும் அடிபட்டது உண்மைதான். ஆனால் எனக்கு அதில் ஒரு தெளிவு இருக்கிறது. இன்று நிலவுகிற வகுப்புவாத அரசியலில், ஒரு வெகுஜனக் கட்சிக்கு சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை வகிக்க இயலாது. முஸ்லிம் லீக்குக்கு வேண்டுமானால் ஒரு முஸ்லிம் தலைவராக இருக்கலாம். ஆனால் வெகுஜனக் கட்சிக்கு முஸ்லிமோ கிறிஸ்துவரோ தலைமை ஏற்க முடியாது. ஏனென்றால் இன்றைக்கு வகுப்புவாதத்தை எதிர்க்கும் அரசியலைத்தான் காங்கிரஸ் முன்னின்று நடத்துகிறது. அப்படி இருக்கையில்.. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு சமீபத்தில் வருணபகவானை மழைக்காக வேண்டச் சொன்ன அரசுப் பொறியாளர் விவகாரத்தில் என்னை அறிக்கை அளிக்கச் சொன்னார்கள். நான் அறிக்கை கொடுத்தால் என்ன ஆகும்? இந்து மதத்தை எதிர்ப்பதாகத்தான் புரிந்துகொண்டு பிரச்சாரம் செய்யப்படுமே தவிர ஒரு கட்சியின் கொள்கையைச் சொல்வதாக புரிந்துகொண்டு ஏற்கப்படாது. காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு தடவையும் அந்த பயம். எனவே எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் நான் அதற்காக தமாகாவுக்கு வரவில்லை. என்னைப் பொருத்தவரை நான் பிறப்பால், வளர்ப்பால், வாழ்க்கையால் காங்கிரஸ்காரன். காங்கிரஸ் என்பது இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி என்று அழைக்கப்படும் கட்சிக்கு மட்டுமே உரிமையானது அல்ல. எப்படி பல கம்யூனிஸ்டு இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், சோசலிச இயக்கங்கள் உள்ளனவோ அதுபோல் நாங்களும் காங்கிரஸ்தான். இன்றைய அ.இ.காங்கிரசின் அணுகுமுறை ஒரு நாளும் தமிழகத்தில் அக்கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்லாது. என்றாவது இது மாறுமா என்று காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். இது நடக்காது என்ற பின்னர் காங்கிரஸ் கொள்கைகளை விட்டுவிடாமல் தமிழகம் தழுவிய காங்கிரஸ் கட்சியாக தமாகாவைக் கட்டமைத்துள்ளோம்.
எமர்ஜென்சி திரும்பவும் வரலாம் என்று அத்வானி கூறி உள்ளார். எமர்ஜென்சி இருண்டகாலம் என்று சொல்லப்படுகிறது ஆனாலும் எமர்ஜென்சிக்குப் பிந்தைய தேர்தலில் நாடே காங்கிரசை நிராகரித்தது. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்களே? எப்படி?
எமர்ஜென்சியை இந்திரா காந்திகொண்டுவந்த நோக்கம் சரியானதுதான். ஆனால் செயல்படுத்தப்பட்ட முறைதான் சரியல்ல. அவரே தவறை உணர்ந்து பகிரங்க வருத்தம் தெரிவித்தார். வடமாநிலங்களில் அவசரநிலையை முன்னிட்டு நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்கள் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் அச்சட்டம் ஏழை எளிய மக்களுக்குப் பயன்பட்டது. அநியாய வட்டிக்காரர்கள் சிறையில் அடைக்கபட்டனர். வங்கிகளில் கடன்கள் ஏராளமாக வழங்கப்பட்டன. அரசு அதிகாரிகள் ஒழுங்காக வேலை பார்த்தார்கள். ஒரே எமர்ஜென்சிதான். ஆனால் அது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட விதம் வேறு. வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட விதம் வேறு.
திரும்பவும் எமர்ஜென்சி வருமா? நீங்கள் கருதுவது என்ன?
ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலில் கூட பாசிச அரசுகள் உருவாகும். வரலாற்றில் ஹிட்லர் அப்படித்தான் உருவானார். இன்று பாஜக தவிர எல்லா மாநில முதல்வர் மேலும் ஏதேனும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எல்லா அரசியல் கட்சித் தலைவர்கள் மேலும் ஏதாவது வழக்கு விசாரணை நடக்கிறது. எனவே மத்திய அரசைக் கேள்வி கேட்கும் மனநிலை எந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் இல்லை. இன்று எமர்ஜென்சி வந்தால் அன்று போராடிய தலைவர்கள் போல் இன்று யாரும் இருப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. இன்று எல்லா தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர். இது ஒரு கட்டத்தில் ஒரு இயக்கமாக மாறினால் அதை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு அவசர நிலை என்ற ஆயுதம்தான் உள்ளது. அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பது என் ஆசை.
த,மா.காவுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது?
1967-ல் எப்படி ஒரு அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டதோ அதுபோன்ற மாற்றத்துக்கு தமிழ்நாடு தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த மாற்றம் 2016 தேர்தலிலிருந்து ஆரம்பமாகும். 1967-ல் இருந்து 2014 வரை தமிழ்நாட்டுஅரசியலில் விளங்கிய கொள்கைகள், தத்துவங்கள், தலைவர்கள் எல்லாம் வெளியேறி, ஒரு மிகப்பெரிய தலைமுறை மாற்றம் வரப்போகிறது. இந்த மாற்றத்துக்காக மக்கள் காத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. இம்மாற்றத்தின் போது, நிச்சயமாக தமாகாவுக்கு ஒர் இடம் நிச்சயம். எங்கள் கட்சித் தலைவர் வாசன் அவர்களுக்கு வயது ஒரு அனுகூலம். இந்த வயதில் பொறுப்பான, எல்லா சமூகங்களும் ஏற்கக்கூடிய தலைவராக என்னைப் பொறுத்தவரை அவரே காட்சி தருகிறார்.
ஜூலை, 2015.